Skip to main content

“குற்றவாளிகளுக்குக் கருணை காட்டக் கூடாது” - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

Published on 27/04/2025 | Edited on 27/04/2025

 

Kashmir Chief Minister Omar Abdullah says There should be no mercy for criminals for pahalgam

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டத்தில், பல முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. இதற்கிடையில், எல்லையில் பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். 

அதே வேளையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், இந்தியா- பாகிஸ்தான் எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்தது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், குற்றவாளிக்கு கருணைக் காட்டக் கூடாது என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கும் அதன் தோற்றத்திற்கும் எதிராக ஒரு தீர்க்கமான போராட்டம் நடத்தப்பட வேண்டும். காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்திற்கும் அப்பாவி மக்களின் கொலைக்கும் எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் இதை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செய்தனர். இந்த ஆதரவை உருவாக்கி, மக்களை அந்நியப்படுத்தும் எந்தவொரு தவறான செயலையும் தவிர்க்க வேண்டிய நேரம் இது. குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது. ஆனால் அப்பாவி மக்களை இணையாக சேதப்படுத்த வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்