முதல்வர் எடப்பாடி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்த பிறகு பல்வேறு குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரலாம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் லண்டன், அமெரிக்கா, துபாய் என்று எடப்பாடி வெளிநாட்டுப் பயணம் சென்ற போது, நான் தமிழ்நாடு திரும்பி வந்ததும் ஒரு சில அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவேன் என்று சொல்லியதாக கூறப்படுகிறது. அதனால் அமைச்சர்கள் பலருக்கும் பதட்டமான சூழ்நிலையில் இருந்துள்ளனர்.
அதேபோல் அவர் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்ததும், துணை முதல்வரான ஓ.பி.எஸ். உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிலரிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது பெஞ்சமின், ராஜலட்சுமி உள்ளிட்ட நால்வரை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக முன்னாள் மந்திரி தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, ராஜன் செல்லப்பா, சதன் பிரபாகரன் மற்றும் முன்னாள் மந்திரி சண்முகநாதன், முருகுமாறன் இவர்களில் நான்கு பேரை அமைச்சராக்கலாம் என்று தன் விருப்பத்தையும் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த நேரத்தில் உளவுத்துறை இது தொடர்பாகக் கொடுத்த ஒரு ரிப்போர்ட் எடப்பாடி மனதை கொஞ்சம் மாற்றியுள்ளதாக சொல்கின்றனர்.
உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டில், ஏற்கனவே மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, இவர் தி.மு.க.வோடு நல்ல தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நால்வரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் அவர்களும், மேலும் சிலரும் தி.மு.க.விற்கு மாறிவிட்டால் ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கலாம் என அந்த அறிக்கையில் இருப்பதாக கூறுகின்றனர். இதைப் பார்த்து ஷாக்கான எடப்பாடி, அமைச்சரவை மாற்றத்தை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிகின்றனர்.