
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசுக்கு இந்த தீர்ப்பை பெற்றுத் மூத்த வழக்கறிஞர்களான முகில் ரோத்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி. வில்சன் ஆகியோருக்கு அரசு சார்பில் சென்னையில் நேற்று (27.04.2025) பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி, பாராட்டுகளை தெரிவித்து சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டி எல்லையில்லாத மகிழ்ச்சியோடு கூடியிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும் மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஆளுநருக்கும். குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி. அரசியல் சாசன பிரிவு 142இன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியது.
ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன், இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை. இந்த அரசியல் உரிமையை சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அறிவிற்சிறந்த வழக்கறிஞர்களே, உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள் அமைப்புகள் ஏன். தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் வாதிட்ட நீங்களும் தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி.
இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை உருவாக்கியிருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, பேரறிஞர் அண்ணா வலியுறுத்தி, கலைஞர் முழக்கமாக வடித்து கொடுத்ததுதான் மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியைப் பெறுவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்” எனப் பேசினார்.