
உலகம் முழுக்கப் பெயர் வாங்கிய இருட்டுக்கடை அல்வா கடையின் ஆழமாகப் புதைந்திருந்த மர்மங்களை 1940 முதல் 2025 வரையிலானவைகளை நிறம் மாறாமல் அப்படியே வெளிக் கொண்டு வந்த நக்கீரன் ஏப் 23-25 நாளிட்ட பதிப்பில் கட்டுரையாகப் ஃபோகஸ் செய்திருந்தது. இருட்டுக் கடை அல்வாவின் ருசி போன்று அந்தக் கடையின் வரலாறு நாடு முழுக்கப் பரவி அனைவரின் புருவங்களையும் உயரவைத்திருக்கிறது. அந்த வகையில் இருட்டுக் கடையை வெளிச்சம் போட்டது நக்கீரன். அதுமட்டுமல்லாது, இருட்டுக் கடை தொடர்பாக உயில் ஒன்று இருந்ததையும், அதற்குரிய வாரிசு எனப் பேசப்படும் நயன்சிங் என்பவரையும் வெளி உலகிற்கு கொண்டு வந்து முன் நிறுத்தியது நக்கீரன். நக்கீரனின் கட்டுரை வெளியாகி தென்னகத்தில் ஏக பரபரப்பினை ஏற்படுத்திய வேளையில், அதில் மையப்படுத்திய நயன்சிங் வெளி வந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடந்தவைகளை விவரித்தது மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.
நெல்லை டவுனின் உள்ள நயன்சிங்கை அவரது வீட்டில் நாம் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது, “அடையாளமில்லாமல் முடங்கிக் கிடந்த என்னை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி எங்களின் பாரம்பரிய இருட்டுக்கடையின் என்னுடைய உரிமைகளைப் பெற நான் சட்ட ரீதியாகப் போராடக் கூடிய துணிச்சலையும் தைரியத்தையும் கொடுத்தது நக்கீரன். இருட்டுக்கடை பற்றிய அனைத்தையும் முதலில் விரிவாகக் கொண்டு வந்தது நக்கீரன் தான். அதற்காக நான் நன்றிக் கடன்பட்டவன்” என்று உணர்ச்சிப் பெருக்கில் தழுதழுக்கப் பேசினார்.

மேலும் புரையோடி போயிருந்த விவரங்களை விவரித்த அவர், “இருட்டுக்கடை அதிபர் என்னுடைய மாமா பிஜிலிசிங்கின் மனைவி சுலோச்சனா பாயின் ரத்த வழி உடன் பிறந்தவரான ஜெயராம் சிங் எனது தந்தை. இருட்டுக்கடை தொழில் வியாபாரத்தில் அத்தைக்கும் மாமாவிற்கும் உதவியாய் இருந்தார்கள். மாமா பிஜிலிசிங்கிற்கு வாரிசு இல்லை. எனவே ரத்தவழியில் உரிமைப்பட்ட என்னை மாமா பிஜிலிசிங் தான் வளர்த்தார். அவர் எங்கே சென்றாலும் உடன் என்னை அழைத்துச் செல்வார். அப்போது கூட சந்திப்பவர்களிடம் என்னை தன் மருமகன் என்று சொல்லாமல் என்னோட பிள்ளை என்று தான் சொல்லுவார். இது இப்படியே பரவிப்போனதால், பிஜிலிசிங் மகன் தான் நயன்சிங் அவரின் வாரிசு. அவருக்குப் பின்னால் இருட்டுக்கடையின் ஓனர் நயன்சிங் தான் என்று பரவலாகவே பேசவும் பட்டது.
தவிர அப்போதைய காலங்களில் மாமா பிஜிலிசிங் கஸ்டம்ஸ்சில் வேலை பார்த்ததால் கடையைக் கவனித்துக் கொள்ள ஹரிசிங்கை கொண்டு வந்து வைத்தார். என் தந்தையான ஜெயராம்சிங் தன்னுடன் பிறந்த தம்பி என்பதால் அத்தை சுலோச்சனா பாய் அவர் மீது பாசமாக இருப்பார். அத்தையும் என்னுடைய அப்பாவிடம் கன்சல்ட் செய்யாமல் எதையும் செய்யமாட்டார். இருட்டுக் கடையை அத்தை சுலோச்சானா பாய் கவனித்துக் கொண்டிருந்த போது என்னோட அப்பா ஜெயராம் சிங்கும் அத்தைக்கு உதவியாக இருப்பார். இந்த நேரத்தில்தான் 1999இல் மாமா பிஜிலிசிங் வாரிசுன்ற முறையில இருட்டுக்கடை உரிமையையும், சொத்துக்களையும் என் பேரில் உயிலா எழுதி வச்சாங்க. அவர் மனைவியான என் அத்தை சுலோச்சனபாய் காலமான பின்பு தான் இந்த உயிலும் நடைமுறைக்கு வரும்னு பதிவு பண்ணியிருந்தாக. அதுவும் என்வசம் தான் இருக்கு.
இந்த இடைப்பட்ட நேரத்தில் கொரோனா காலத்தில் உடல்நலக்குறையாக இருந்த அத்தை சுலோச்சனா பாயை நான் தான் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் கவனித்து வந்தேன். அப்பா மறைவுக்குப் பிறகு, அத்தை சுலோச்சான பாய் கடை மற்றும் பிற விஷயங்களை என்கிட்ட கன்சல்ட் பண்ணி செய்வாங்க. இந்த சமயத்தில் பெண் என்ற வகையில் என் தங்கை கவிதாசிங், உள்ள வந்து அத்தைக்கு கூடமாட உதவி பண்ணாங்க. தன் தம்பி மகள் தானே என்று அத்தையும் அவளை ஏத்துக்கிட்டாங்க. காலப் போக்கில் நான், என்னோட அம்மா உள்ள வந்தா சிக்கல் என முடிவு செய்த கவிதாசிங், எங்களை அத்தை சுலோச்சனா பாயை சந்திக்க விடாம கிட்டத்தட்ட அவுங்களை ஹவுஸ் அரெஸ்ட்லயே வைத்திருந்தார். அத்தை கூட என் தங்கை நெருக்கம் ஆகிட்டாள். நானும் இப்ப பிரச்சினை வேணாம் என்று ஒதுங்கிட்டேன். அத்தையோட நெருக்கத்தப் பயன்படுத்திக்கிட்ட என்னுடைய தங்கை, அவுங்களை வசப்படுத்தி, இருட்டுக்கடை உரிமையை, சொத்துக்களை தன்னுடைய கணவர் பெயருக்கு பவரா எழுதிவாங்கி அதன் மூலம் சொத்துக்கள் மற்றும் கடை உரிமையை தன் வசப்படுத்திக்கிட்டாள். எங்களை ஓரம் கட்டிட்டாள். நான் பிரச்சினை வேணாம் என, என்னோட உரிமையைப் பெற, உயிலைக் கொண்டு சட்டரீதியாக போக ஆரம்பித்துவிட்டேன்.

அதைவிட என்னோட வீட்டில் நான், எடுத்து வளர்த்த பொண்ணு கனிஷ்கா சிங்கை, பெத்த தாய் என்ற வகையில் கனிஷ்காவோட வாழ்க்கையை கவிதாசிங் கவனிக்காம சீரழிச்சிட்டாள். நான் வளர்த்த என் மருமகள் கனிஷ்காசிங், வாழவேண்டிய வாழ்க்கை போய் அவமானப்பட்டு நிற்பதைப் பார்த்து எனக்கு கடும் மனவேதனையாக இருக்கிறது. பாவம் படித்த பொண்ணு பண்பானவள். அவளோட மாப்பிள்ளை வீட்டார்கள், அவள பேசக்கூடாத பேச்சை எல்லாம் பேசுறாங்க. என் மருமகளோட மொராலிட்டியவே தப்பா பேசுறதப்பாத்து என்னால் தாங்க முடியலை. இவுங்க பிரச்சினையில், என் மருமகளை பலி ஆகிட்டாங்க. பெத்த புள்ளைய நல்லா வாழ வைக்க வேண்டுமே என்று கவிதா நினைக்கல. அதோட உலகம் முழுக்க பெயர் வாங்குன இருட்டுக் கடையோட கௌரவம, மாண்பையே காயப்படுத்திட்டா கவிதா. பொறுக்கலய்யா” என்றார் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி..
இருட்டுக் கடை உரிமை விவகாரத்தில் தன் சகோதரருக்கு எந்த வித உரிமையும் கிடையாது என்று கவிதா சிங் மறுத்திருக்கிறார். இருட்டுக்கடை விவகாரத்தின் சூடும் தகிப்பும் இப்போதைக்கு அடங்குவதாகத் தெரியவில்லை.