Skip to main content

“கோரிக்கைகளை உடனே நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்..” - நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு 

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

"We are ready to fulfill the demands immediately.." - Ministers talk with executives

 

2024 பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டு அரசியலிலும் வேகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதுடன், தமிழ்நாட்டில் மண்டல வாரியாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க, எதிர்க்கட்சியான அதிமுக பிரம்மாண்ட மாநாட்டிற்குத் தயாராகி மாவட்டந்தோறும் கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களை காணொளி மூலம் சந்தித்து உட்கட்சி மோதல்களைத் தவிர்த்து கட்சித் தொண்டர்களைச் சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்துங்கள் என்றார். இதனையடுத்து மாவட்டந்தோறும் ஒன்றியங்கள் வாரியாக கட்சி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் சந்தித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பனங்குளம் கிராமத்திலும், மாங்காடு கிராமத்திலும் ஒன்றியச் செயலாளர் ரவி தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞான.இளங்கோவன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மா.செ வும் அமைச்சருமான ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்டறிந்தனர்.

 

அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, “தமிழ்நாடு ஆட்சியைப் பார்த்து பா.ஜ.க வுக்கு பயம் வந்துள்ளதால் தான் அண்ணாமலை தமிழ்நாட்டை சுற்றி வருகிறார். இதனால் எந்தப் பயனும் இருக்காது. ஆனால் தேர்தல் நேரத்தில் எந்த அளவிற்கும் இறங்கிப் போவார்கள். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்து கட்சித் தலைமையின் உத்தரவையேற்று தேர்தல் பணி செய்ய வேண்டும்” என்றார்.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “கடந்த அதிமுக அரசு ஏராளமான மக்கள் நலப்பணிகளைச் செய்யாமல் விட்டுச் சென்றுள்ள சுமையையும் சேர்த்து இப்போது சுமக்கிறோம். 27 மாத திமுக ஆட்சியைப் பார்த்து மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கும் அதனுடன் ஒட்டியுள்ள அ.தி.மு.க.வுக்கும் பயம் வந்துவிட்டது. நீங்கள் தான் கட்சி. தொண்டர்களால் தான் இன்றைய வெற்றி சாத்தியமாகி உள்ளது. உங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை மனுக்களாகக் கொடுங்கள். நிறைவேற்றுவோம். அதே போல உங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

 

கிராமங்கள் வாரியாக கட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு அவர்களிடம் கோரிக்கைகளைப் பெற்றுள்ளனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் கட்சித் தொண்டர்களின் பணி சிறப்பாக இருக்கும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். மேலும் மாவட்ட அளவில் உள்ள யார் பெரியவர் என்ற உட்கட்சி மோதல்களை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்