அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், எம்ஜிஆரின் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அவர், “எம்ஜிஆர் மறைந்தாலும் உலகெங்கும் உள்ள தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். அவரின் 35 ஆவது நினைவு நாளில் பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தினோம்.
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் இவர்கள் ஒன்றிணைய முயற்சிகள் எடுக்கலாம். எங்கள் கட்சியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் உள்ளது. சசிகலா சொல்வது போல் இங்குச் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சில பேர் போனார்கள். அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு நாங்கள் ஒதுக்குவது தான் சீட்டுகள். அதனால் எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. கூட்டணிக்கு சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என யாரையும் சேர்த்துக் கொள்வதாக இல்லை. அவர்கள் சேர்ந்து வந்தாலும் சரி, தனித்தனியாக வந்தாலும் சரி, கூட்டணியிலும் கட்சியிலும் சேர்த்துக் கொள்வதாக இல்லை” எனக் கூறினார்.