அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன், கட்சியின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கி அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். மேலும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் நிலையில் அதிமுக எம்.ஏ.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் குறித்து ஏன் நாங்கள் பேச வேண்டும். பன்னீர்செல்வத்தைப் பற்றி எல்லாம் கூட்டத்தில் பேசவில்லை. நாங்கள் அனைத்து விவகாரங்களிலும் திமுகவை எதிர் செயல்படுகிறோம். ஆனால் ஓபிஎஸ் தரப்பு அவ்வாறு செய்யவில்லை. கருணாநிதி என்று தான் ஜெயலலிதா பேசுவார். ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்லை. திமுக மீது ஓபிஎஸ்க்கு அவ்வளவு பாசம் இருக்கிறது. மக்கள் தான் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள். அவர்கள் தான் முடிவு செய்வார்கள்'' என்றார்.