Skip to main content

முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்! திருமாவளவன்

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
ddd

 

முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை நோய்த் தொற்று அதிகமாக உள்ள திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் முதலான மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தின் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இன்று மட்டும் ஏறத்தாழ 4 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ‘நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி அச்சமடைய வேண்டாம்’ என்று மருத்துவக் குழுவினர் கூறினாலும் மக்கள் அதனை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அச்சத்திலிருந்து விடுபடும் மனநிலையில் இல்லை.

மற்ற மாநிலங்களை விட இங்கே அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது என்பது உண்மைதான். எனினும் இது நமது மாநிலத்தில் இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது, போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்காவது சோதனைகள் செய்யப்பட வேண்டும். அதற்கு விரைவு சோதனை முறை மட்டுமே கைகொடுக்கும். மத்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.எம்.ஆர் விரைவு பரிசோதனை முறையான ஆண்டிஜன் முறையைக் கையாளுமாறு ஒரு வாரத்துக்கு முன்பே மாநிலங்களுக்கு அறிவுறுத்திவிட்டது.

அவ்வாறு இருந்தும்கூட இதுவரை ஆண்டிஜன் முறையிலான சோதனைகள் தமிழ்நாட்டில் துவக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அந்த முறையில் முழு முடக்கம் அறிவுக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் நோய்த்தொற்று இருப்போர் இல்லாதோர் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

தமிழ்நாடு முழுவதும் பொது போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும், காய்கறி சந்தைகளை முறைப்படுத்துவதும் அவசியமாகும்.

அரசு அலுவலர்கள் ஏராளமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகிற காரணத்தால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய ஏற்பாடு செய்வது அவசியமானது ஆகும். அதுமட்டுமன்றி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக ஆயுள் காப்பீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மா

நிலம் முழுவதும் பொது முடக்கத்தை அறிவிக்கவில்லை என்றாலும் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள்  இருக்கும் மாவட்டங்களில், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அங்கே முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கே போக வேண்டியிருப்பதால் அங்கே அழுத்தம் அதிகமாகிறது. எனவே நோயாளிகளை ஒரு சில மருத்துவமனைகளில் குவிக்காமல் பல்வேறு இடங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வகைசெய்து இந்த சுமையைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில்  இறப்பு சதவீதம் அதிகம் இருப்பதால் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரப்படும் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு  செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்