
என்னைத்தான் முதலமைச்சராக விரும்பினார் ஜெயலலிதா. நான் மறுத்த காரணத்தினால் ஓ.பன்னீர்செல்வத்தை முதலைமைச்சராக்கினார் என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான விஜயசாந்தி.
இது குறித்து அவர் வாரஇதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும், ’’என் திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இரண்டு காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.
அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன்.
அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர்பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன். அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன். பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.