விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே வேளையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனைத்துக் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், குறிப்பாக பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமகவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. இடைத்தேர்தலுக்காக சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக திமுக செலவிட்டுள்ளது.
பணம், பொருளை கொடுத்து பெறுவது வெற்றி அல்ல; ரூ.6 ஆயிரம் பணமும், ரூ.4 ஆயிரத்திற்கு பொருளும் திமுக கொடுத்திருக்கிறது. குறிப்பாக 3 தவணைகளாக வாக்காளர்களுக்கு திமுக பணத்தை கொடுத்துள்ளது. இத்தனை பொருட்கள் கொடுத்தது, பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லையா?. திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும். இந்த வெற்றி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது?” எனப் பேசினார்.