22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவைவிட அதிக வாக்குகள் வாக்கிவிட வேண்டும் என்று அமமுகவினர் தீவிரமாக பணியாற்றினர். இந்த 4 தொகுதியிலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நினைப்பது நடக்குமா என்பது மே 23ஆம் தேதிதான் தெரிய வரும்.

22 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டால், அதிமுகவுக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பும். கட்சியில் உள்ள இரண்டாம் கட்டதலைவர்கள், தொண்டர்கள் இப்போதுள்ள தலைமைக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். இதனால் பெரிய அளவில் அதிமுகவுக்குள் கட்சி மோதல் வெடிக்கும். அதே நேரத்தில் அதிமுகவைவிட அமமுக அதிக வாக்குகள் பெற்றாலோ, எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கக்கூடிய அளவுக்கு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றாலோ தாய் கட்சியான அதிமுகவை கைப்பற்ற வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் அமமுகவினர் மேற்கொள்வார்கள்.
இதுபோன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்யலாம், எப்படி சமாளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்கள் தற்போது தீவிர ஆலோசனையில் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு நிலைமை எப்படி வந்தாலும் கட்சி தலைமையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற வேண்டும் என்பதற்கான திட்டங்களும் நடந்து வருகிறதாம்.