நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழ்நாடு ஆளுநர் செயல்படக் கூடாது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஆளுநராக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை போன்று செயல்படும் ஆளுநர்கள் மீது இந்திய குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு போட்டியாக ஆளுநர்கள் தனி அரசாங்கத்தை நடத்த நினைத்து மாநில அரசுகளுடன் போட்டி போடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மாதக் கணக்கில் இழுத்தடித்து இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். பாஜகவிற்கு மாநில கட்சிகள், அகில இந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜக முன் மொழிந்துள்ள திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிய வேண்டும். எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பாஜகவை எதிர்க்கக் கூடிய மாற்று திட்டத்தை உருவாக்க முன்வரவில்லை.
ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்று சொல்லி வரும் பாஜக இந்தியாவை முழுவதுமாக இந்து நாடாக மாற்ற துடிக்கிறது பாஜக. பாஜகவை எதிர்க்க மாற்று திட்டத்தை உருவாக்கி எதிர் அணியை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை உருவாகும்." என்று வருத்தம் தெரிவித்தார்.