ஈரோடு மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதானது. காலை முதல் பதினோரு மணி வரை இயந்திரங்களை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் சிஎஸ்ஐ பள்ளி, வீரப்பன் சத்திரம், மாணிக்கம் பாளையம், சித்தோடு ஆகிய பூத்துகளில் மின்னணு இயந்திரம் பழுதாகி மக்கள் வாக்களிக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதேபோல் மொடக்குறிச்சி மற்றும் தாராபுரம் பகுதிகளிலும் இயந்திர கோளாறு இருந்தது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள சுமார் ஏழு பூத்துகளில் இயந்திர பழுது ஏற்பட்டது.
மூன்று மணி நேரமாக இயந்திரத்தை சரி செய்து பதினோரு மணிக்கு மேலே மக்கள் வாக்களிக்க முடிந்தது. இந்த இயந்திரங்களில் ஏதாவது கோளாறு செய்தீர்களா என்று மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பொதுவாக மின்னணு இயந்திரம் நம்பத் தகுந்த மாதிரி இல்லை என்று மக்கள் கூறினார்கள். இயந்திரங்கள் சரிசெய்யப்பட்ட பிறகு மக்கள் வாக்களிக்க தொடங்கினார்கள்.