ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பரப்புரை சூடு பிடித்திருக்கும் நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று சரியாக காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தார்கள். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்து இருந்தது. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அதை உறுதி செய்துள்ளனர். அந்த பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்றதும் செல்லும் என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவின் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கூறப்பட்டது. இன்றைய வழக்கில் இபிஎஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கட்சிக்கு எதிராக வழக்குகளை தொடர உரிமை இல்லாதவர் என வாதாடப்பட்டது. மேலும், இரட்டைத் தலைமை வேண்டாம் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனவே அதிமுகவின் பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் ரத்து செய்ய பன்னீர்செல்வத்திற்கு தார்மீக உரிமை இல்லை. எனவே, பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை, கட்சி விதிகளுக்கு எதிராக இபிஎஸ் செயல்படுகிறார் என்றும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்சியைக் கொண்டுவர நினைக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், கட்சியை தன்வசப்படுத்தவே இபிஎஸ் முயல்கிறார் எனக் கூறப்பட்டது. ஆனால், இபிஎஸ்-ன் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓபிஎஸ் வாதங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பின் மூலம் இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். அதேபோல், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பை நீக்கியதும் செல்லும் என்பது தெளிவாகியுள்ளது.