மூன்று நாள் அரசியல் பயணமாக தமிழக வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பு, அதன் பண்பாடு, தமிழர்களின் கலாசாரம் உள்ளிட்டவைகளை தனது பிரச்சாரத்தில் அதிகம் பயன் படுத்துகிறார் ராகுல்காந்தி.
ஈரோடு அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "நான் தமிழன் கிடையாது. எனது தாய் மொழி தமிழும் இல்லை. ஆனாலும், நான், உங்கள் குடும்பத்தில் ஒருவன். தமிழ் எனது மொழி இல்லை என்றாலும் அதன் பெருமையை உணர்ந்தவன். தமிழின் சிறப்பு எப்படிப்பட்டது என்பதையும் நான் அறிவேன். தமிழை பெரிதும் மதிக்கிறேன்.
மத்திய அரசும் பிரதமர் மோடியும் தமிழ் மொழியை அவமதிப்பதை ஏற்க முடியாது. அவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை மதிப்பதே இல்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அவர்கள் தமிழில் ஓரிரு வார்த்தைகளைப் பேசி ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால், தமிழர்களை ஏமாற்ற முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்" என சரமாரியாக மோடி அரசாங்கத்தை தாக்கினார் ராகுல் காந்தி.
இந்த நிலையில், ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பிரச்சார முழக்கத்தையும், ஒரு கை பார்ப்போம் என்கிற ஒலி ஒளி காட்சியையும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியில் இருக்கிறது தமிழக காங்கிரஸ்!