Published on 25/07/2019 | Edited on 25/07/2019
நாடாளுமன்ற தேர்தலில் பண புழக்கம் அதிகம் நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் வேலூர் இடைதேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டக சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தற்போது தினகரன் கட்சி வேலூரில் போட்டியிடாத நிலையில் சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டக சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.