தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் பெருமையைப் பேசுவதற்கு சந்தோசப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் ஜி20 மாநாடு இந்தியாவில் நடப்பது குறித்துப் பேசினார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருப்பவர்கள் முதலில் தமிழ்நாட்டுப் பெருமையை வெளியில் சொல்வதற்கு சந்தோசப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஜி20 மாநாடுகள் முக்கியமான நகரங்களில் நடத்துவதற்கு தமிழக அரசு முன்வந்து பேசலாம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இடங்கள் நம்மிடம் உள்ளது. நாட்டிலேயே தொல்லியல் இடங்கள் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோவில்கள், சிற்பக்கலை எனப் பல்வேறு இடங்களுக்கு புகழ் பெற்றது தமிழகம். உலகத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்ல, சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் அத்தனை பேரும் இந்தியாவிற்கு வர இருக்கிறார்கள்.
அதனால் தமிழக அரசு இங்குள்ள பெருமையை நீங்களே பேசுவதோடு அல்லாமல் நம் பெருமையை அடுத்தவர்களுக்கு சொல்வதற்கு இது சரியான வாய்ப்பாக பார்க்க வேண்டும். சென்னை மட்டுமல்ல, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர் மாதிரியான நகரங்களிலும் மாநாடு நடத்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். தமிழர்களின் பெருமை; தமிழ் மொழியின் பெருமை; தமிழகத்தின் பெருமை ஆகியவற்றை உலக நாடுகள் சந்திக்கும் இவ்வேலையில் எடுத்துக்காட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதனால் இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சினிமா கலாச்சாரம் என்ன புதிதாகவா இருக்கிறது. சினிமா கலாச்சாரம் 50 வருடங்களாக அரசியலோடு இணைந்துள்ளது அனைவருக்கும் தெரியும். அதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற திறன் சார்ந்த பயிற்சிகள் இதெல்லாம் கொடுக்க வேண்டும். சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.