Skip to main content

பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
pmk election manifesto release

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் பா.ம.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

சமூக நீதி

* 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.

* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.4

* தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.

* கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

* தனியார் துறை, நீதித் துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும்.

* மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

* தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

மாநிலத் தன்னாட்சி

* மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும்.

*  நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு

*  மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.

* ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50%&ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*  உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.

* தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

*  மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைச் சட்டம்

*வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும். அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. வலியுறுத்தும்.

*உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும்.

*  ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை.

* அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வசதியாக புதிய ஆணையம்.

* 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை

* மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு மானியம் ரூ.6,000&லிருந்து ஏக்கருக்கு ரூ.10,000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும்.

* வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி.

* பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 இலட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி.

* நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மைக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

*தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டுவதன் மூலம் உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம்

*  தொழில் திட்டங்களுக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.

*  கடலூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.

* என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் மற்றும் முதல், 2ஆம் சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு தடை.

* குறிப்பிட்ட காலத்திற்குள் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை.

* மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

அணுஉலை இல்லா தமிழகம்

* தமிழ்நாட்டை அணுஉலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கால அட்டவணை வெளியிடப்படும்.

* காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நதிகள் இணைப்புத் திட்டம்

*புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டின் நலனுக்காகக் கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

* தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கொண்ட ரூ. 1 இலட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசனப் பெருந்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

மேகதாது அணைக்குத் தடை

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டக் கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்.

* முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரியின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசின் மூலமாக பா.ம.க. தடுத்து நிறுத்தும்.

தமிழக ஆறுகள் தூய்மைப்படுத்துதல் திட்டம்

* தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு நச்சுக் கழிவுகள் கலப்பால் முழுமையாகச் சீரழிந்திருக்கிறது. தாமிரபரணி ஆற்றைச் சீரமைத்து அதன் பழைய நிலைக்கு மீட்டுருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, நொய்யல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் தூய்மைப்படுத்தவும், கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 3 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

* இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 30 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தமிழ்நாட்டில்  உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 இலட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளில் 20 இலட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டுத் தொழிற்பயிற்சி வழங்கப்படும். 10 மாதப் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும்.

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

* சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும், கடனுதவியும், தேவையான பிற வசதிகளும் கிடைப்பதற்கும் பா.ம.க. பாடுபடும்.

மகளிருக்கு மாதம் ரூ.3,000

* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

* மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

* விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் மானிய விலையில் வழங்கப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை இப்போதுள்ள 33 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தவும், அதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றவும் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

*  மத்திய அரசால் வழங்கப்படும் கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால மருத்துவ உதவி தற்போதுள்ள 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

குழந்தைகளுக்கான நீதி

* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக ரூ.10 இலட்சம் வைப்பீடு.

* 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் என்று அறிவிக்கப்படுவார்கள்.

* பெண் குழந்தைகளுக்காக தனி விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

* குழந்தைகளுக்கு ஆளுமைக் கல்வி, இணையப் பாதுகாப்புக் கல்வி வழங்கப்படும்.

* ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 8ஆவது ஊதியக்குழு

* அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பாமக வலியுறுத்தும்.

* மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்துப் பரிந்துரைக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும்.

* அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 10% ஆண்டு வட்டி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* சமவேலைக்குச் சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய & மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.

கல்வி

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

* வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* தொலைதூரங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆசிரியர் குடியிருப்புகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

உயர் கல்வி

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும்.

* மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு

* நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.

* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்.

அனைவருக்கும் இலவச மருத்துவம்

* இந்தியாவில் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரையும் சேர்ப்பதன் மூலம் இந்த இலக்கு எட்டப்படும்.

*அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் அறுவைச் சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணிநேர அவசர முதலுதவி தரும் மருத்துவமனைகளாகப் படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்.

* சென்னையில் ரூ.1000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையத்தை அமைக்கப் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடையில்லை

* இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள தடை நீக்கப்படும்.

* தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 300 புதிய மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அரசுகளுடன் இணைந்து தொடங்கப்படும்.

* நாடு முழுவதும் பொதுமக்கள் அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து கூட்டுறவு முறையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும்.

* கூட்டுறவு முறையில் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்கள், அவற்றை உருவாக்கிய பொதுமக்கள் நல அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை.

* பொதுச் சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.

*மத்திய அரசின் அனைத்துச் சேவைகளையும் சான்றிதழ்களையும் இணையம் வாயிலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும்

* இந்தியாவின் கடலோர மாநிலங்கள் அனைத்திலும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு வலுப்படுத்தப்படும். அம்மாநிலங்களில் மாநில அரசு, மாநிலக் காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* போதை மருந்துக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.

* போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலங்களுக்கு மதுவிலக்கு மானியம்

* இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ள பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசை வழங்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நோக்குடன் 100% தீமை வரி விதிக்கப்படும்.

ரூ.10 இலட்சம் வரை வரி இல்லை

* தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* ரூ.7 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 5% வரி வசூலிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 87ஆவது பிரிவின்படி ரூ.15,000 வரை வரி தள்ளுபடி அளிக்கப்படும் என்பதால், ரூ.10 இலட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.

* ரூ.10 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.20 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.1 கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு 50% வரி வசூலிக்கப்படும்.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

* இந்தியாவில் தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. இதை 2 அடுக்குகளாகக் குறைக்க பா.ம.க. வலியுறுத்தும்.

* புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 10%, 25% என்ற அளவில் இருக்கும்.

* இன்றைய நிலையில் 5% ஜி.எஸ்.டி. விகிதத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

* மது, புகையிலை உள்ளிட்ட மனித குலத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள் ஜி.எஸ்.டி.  வரம்பிலிருந்து நீக்கப்படும். இவற்றுக்கு 100% வரை தீமை வரி வசூலிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு

* பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக மட்டும் ரூ.50க்கும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் போது லிட்டருக்கு ரூ.20 வரை குறையும்.

* தங்கம் மீதான 15% இறக்குமதி வரி முற்றிலுமாக இரத்து செய்யப்படும். அதனால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,000 வரை குறையும்.

தொழில்துறை வளர்ச்சி

* இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

* இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும்.

* வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் சிறப்பான தொழில் கொள்கையை வகுத்து செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவிகளை வழங்கும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க முன்வருவோருக்கு குறைந்த விலையில் நிலம், மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

* தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கூட்டாக இணைந்து தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில், அவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு மானியமும் வழங்க பா.ம.க. பாடுபடும்.

* வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் சொந்த மாநிலங்களில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ரோபோடிக் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் திறன், இணைய உலகம், தானியங்கி வாகனங்கள், முப்பரிமாண அச்சுமுறை, குவாண்டம் கணினியியல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நான்காவது தொழில் புரட்சியை இந்தியாவில் விரைவுபடுத்த பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* நான்காவது தொழில் புரட்சி காரணமாக, வேலையிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, உயர்கல்வி மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்யப்படும்.

* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடி தேவைப்படும். இதைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து திரட்டுவதற்கு உதவவும், இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மானியமாக வழங்கவும் மத்திய அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை இப்போது செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாகவும், திண்டிவனம் வரை 6 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இச்சாலை முழுவதும் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதுடன், அதன்மீது திண்டிவனம் வரை 6 வழி உயர்மட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்வண்டித் திட்டங்கள்

* மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் இடைவிடாத முயற்சியால், அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட தருமபுரி & மொரப்பூர் இடையே புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை ஓராண்டில் நிறைவேற்றி முடிக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்காததால் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அனைத்துத் தொடர்வண்டித் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து செயல்படுத்தி முடிக்கப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையோரத் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் புத்துயிரூட்டப்படும். முதல் கட்டமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாகக் கடலூர் வரை புதிய பாதை அமைக்கப்படும்-.

மின் திட்டங்களுக்கு நிதியுதவி

* தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான அனல்மின் திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றைச் செயல்படுத்தப் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

* தமிழகத்தில் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் மூலம் வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றுத்தருவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு

* தமிழக மீனவர்கள் சிக்கள கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்.

* இந்திய & இலங்கை கூட்டுப்பணிக் குழு மூலம் பேச்சு நடத்தி, இந்திய & இலங்கை கடல் எல்லையில் இருதரப்பு மீனவர்களும் முறைவைத்து மீன்பிடிக்கும் நடைமுறை உருவாக்கப்படும்.

* 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.

தமிழ் ஆட்சிமொழி

* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பா.ம.க. பாடுபடும்.

* உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரச்சார சபாவுக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

திருக்குறள் தேசிய நூலாக்கப்படும்

* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, அந்த முயற்சியில் வெற்றி பெறுவோம்.

* மாணவர்களின் மனம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மாநில அரசின் மூலமாக தஞ்சாவூரில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க பா.ம.க. பாடுபடும்

பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றம்

* தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மனித வாழ்நிலை குறியீட்டின் அடிப்படையில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்கள் அடையாளம் காணப்படும். அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மாநிலத்திற்கு உள்ளேயே நிலவும் வேறுபாடுகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் சரிசெய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்படி பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக 371 (ரி) என்ற தனிப்பிரிவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க பா.ம.க. பாடுபடும்.

உள்ளாட்சி & கிராமப்புற வளர்ச்சி

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் போன்று கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. பாடுபடும்.

* மதுவிலக்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி மதுவிலக்குச் சட்டம் இயற்றவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளோ, வேறு திட்டங்களோ செயல்படுத்தப்படுவதாக இருந்தால், அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி

* இலங்கை போர் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* ஈழத் தமிழர்களுக்கு தாயகமாக தமிழீழத்தை அமைப்பது குறித்து ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

* தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில், மத்திய அரசை வலியுறுத்தி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும்.

வெளிநாடுவாழ் தமிழ் நலன்

* அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* வளைகுடா நாடுகளில் கடைபிடிக்கப்படும் புதிய கொள்கை காரணமாக, வேலை இழக்கும் தமிழர்களுக்கு மாற்றுவேலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

* தேர்தல்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் வீணாகப் போவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அது பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம்  கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்.

* தேர்தல்களில் பண பலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாகவும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்த, பிற மாநிலப் பிரிவுகளைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றங்களை செய்ய பா.ம.க. பாடுபடும்.

* வாக்குச் சாவடிகளின் தலைமை அதிகாரிகளாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் வகையில், தேர்தல் விதிகள் திருத்தியமைக்கப்படும்.

விளையாட்டு

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மறுசீரமைக்கப்படும்.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக அந்த விளையாட்டில் சாதனை படைத்த முன்னாள் விளையாட்டு வீரர் ஒருவர் அமர்த்தப்படுவார்.

* மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன், பாடத்திட்டங்களில் விளையாட்டும் சேர்க்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. வலியுறுத்தும்.

பன்முகத் தன்மை

* இந்தியாவில் வாழும் பல்வேறு இன, மத, மொழி பேசும் மக்கள் அனைவரும் அவரவர் பண்பாட்டு, கலாச்சார, மொழி உரிமைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், அனைவரும் முழு மனித உரிமையுடன் வாழும் சூழலை உருவாக்கவும் பா.ம.க. பாடுபடும்.

* இந்து திருமணச் சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக் களையவும், பாலினப் பாகுபாட்டை அகற்றவும், குழந்தைகள் உரிமைகளைக் காக்கவும் பா.ம.க. பாடுபடும்.

சிறுபான்மையினருக்கு மக்கள்தொகைப்படி இடஒதுக்கீடு

* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யவேண்டும் என்று பா.ம.க. கேட்டுக்கொள்ளும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்இடஒதுக்கீடு

* பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் அறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்திருக்கிறது. ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும்படி, மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும்.

* மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைப் பணிகளிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடும்படி மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதைப் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிசெய்யும்.

* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ & மாணவியர்கள் கல்வி உதவித் தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படவேண்டும் என்று பாமக வலியுறுத்தும்.

* அரசுத் துறையில் நிரப்பப்படாத பணியிடங்களைச் சிறப்புப் பணி நியமனங்கள் மூலமாக நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

புதுவைக்கு மாநிலத் தகுதி

*  புதுவை யூனியன் பிரதேசத்திற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* புதுவைக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் போது, மத்திய அரசுக்கு அம்மாநிலம் வழங்கவேண்டிய கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய பா.ம.க. வலியுறுத்தும்.

சார்ந்த செய்திகள்