சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வள்ளலார் சொல்லியிருக்கிறார், ‘தூய உள்ளம் படைத்தவருக்குத்தான் இறைவன் அருள்வான்; வஞ்சகனுக்கு இறைவன் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருப்பான்’ அது கண்டிப்பாக நடக்கும்; நடந்தேரும் என்பதில் சந்தேகம் இல்லை. எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்தின் பாடல் நினைவுக்குவருகிறது. ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும். அந்த மாலைகள் எல்லாம் இப்போது புகழின் உச்சத்திலே.. நிச்சயமாக அதிமுகவை காப்பாற்றக்கூடிய ஒரு எளிய தொண்டனாக, மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய உன்னதத் தலைவனாக அந்த மாலைகள் விழும் காலம் வெகு விரைவில்.
இன்னொரு பாடல், ‘மாறாது ஐயா, மாறாது, மனிதனின் குணமும் மாறாது, காட்டுப் புலியை வீட்டில் வைத்தாலும், கறியும் சோறும் கலந்து வைத்தாலும், குரங்கு கையில் மாலை தந்தாலும், கோபுரத்தின் உச்சத்திலே உட்காரவைத்தாலும்..’ இந்தப் பாடலில் மனிதனின் குணம் மாறாது என்று வரும். ஆக மாறாத சிலர் இருக்கிறார்கள். அவர்களை விமர்சித்து பெரிய ஆளாக்க விரும்பவில்லை. இது நல்ல நிகழ்ச்சி. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அமரவிருக்கிற இந்த நிகழ்ச்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக இந்த இயக்கத்தை காக்கக்கூடிய ஒரு உன்னதத் தலைவன் வந்துவிட்டார்” என்று பேசினார்.