
மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து துரை வைகோ எம்.பி வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.
துரை வைகோவின் இந்த விலகல் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ குறிப்பிட்ட ஒருவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், மதிமுக சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் கூட இருக்கிறது.
இந்த நிலையில், எம்.பியும், மதிமுக தலைவருமான வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ நாளைக்கு நிர்வாக குழு போட்டிருக்கிறோம். நிர்வாக குழுவில் எல்லாரும் வந்து கலந்து கொள்வார்கள். துரை வைகோ விலகல் அறிவிப்பு பிரச்சனை குறித்து எல்லாரும் ஒரு சமாதானமான முறையில பேசுவார்கள். எனவே, நிர்வாக குழுவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதைவிட அடுத்து நாங்கள் நடத்த வேண்டிய போராட்டங்கள், நாங்க நடத்த வேண்டிய மாநாடு, நாங்கள் நடத்த வேண்டிய பொதுக்குழு, இதை பற்றி எல்லாம் வாதிப்பதற்காகத்தான் நிர்வாகக் குழு கூடுகிறது. அந்த முடிவுகளை எல்லாம் மேற்கொண்டு கடமையை செய்ய வேண்டிய நேரத்தில் இந்த பிரச்சனை இப்பொழுது தலைதூக்கி இருக்கிறது. அது பற்றியும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சொல்வார்கள்” என்று கூறினார். அப்போது, துரை வைகோவின் விலகல் கடிதத்தில் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, “அவர் எழுதி இருப்பதை படித்தீர்கள் தானே, அதுதான். அந்த கடிதம் மூலமாக சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாக குழுவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமை நிர்வாகிகள் எல்லாருமே கலந்து பேசும்போது அவங்க அவங்க கருத்தை சொல்லுவாங்க இப்ப நான் எந்த கருத்தையும் சொல்ல முடியாது” எனப் பதிலளித்தார்.