ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர் போட்டியிட்டனர். இதில் இளங்கோவன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 ஓட்டுகளும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கியதன் மூலம் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “மதச்சார்பற்ற கூட்டணிக்கு அதரவு அளித்து மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். முக்கியமாக முதல்வரின் 20 மாத ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அங்கிகாரமாகத்தான் பார்க்கிறேன். இதற்காக உழைத்த திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளாதது குறித்த கேள்விக்கு, “ காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருக்கும் செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் கட்சியின் தூய தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். ஆகையால் என்னைப் பொறுத்தவரையில் அனைவரும் கலந்துகொண்டனர் என்று பதிலளித்தார்.
கொறடா தரப்பில் இருந்து பதவியேற்புக்கு அழைப்பிதழ் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, யார் கொறடா? யாரச் சொல்றீங்க என்று இளங்கோவன் கேட்க அதற்கு செய்தியாளர் விஜயதாரணி என்று சொல்கிறார். உடனே, “ஓ...விஜய தாரணியா? ஆமாம், அவர்களுக்கு தனியா ஒரு அழைப்பிதழ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தவறு செய்துவிட்டேன். அந்த அம்மையாரை நேரில் சந்தித்து, அதற்கான வருத்தத்தையும் கூறிவிட்டு, ஒரு வேளை மீண்டும் ஒரு பதவியேற்பு விழா நடந்தால், முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சந்தித்து அழைப்பிதழ் வைத்து கூப்பிடுகிறேன்” என்று கிண்டலாக பதிலளித்தார்.