Skip to main content

கத்திரிக்காய் கதையை சொல்லி ஸ்டாலின், துரைமுருகனுடன் சி.வி.சண்முகம் காரசார விவாதம்

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

சட்டப்பேரவையில் இன்று ஹைட்ரோகார்பனுக்கு எதிரான தீர்மானத்தின்போது, இயற்கை எரிவாயு திட்டத்திற்கு யார் அனுமதி அளித்தது என்ற விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே விவாதம் நடைபெற்றது.
 

மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ.  டி.ஆர்.பி.ராஜா:-
 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக மக்கள் ஒருமித்த மனநிலையில் எதிர்த்து வருகிறார்கள். இந்த திட்டத்தை நமது மண்ணில் புகுத்த கூடாது. காவிரி டெல்டா பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
 

அமைச்சர் சி.வி.சண்முகம்:- காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் மீத்தேன் உள்ள எரிவாயு எடுப்பது, மரபுசாரா கனிமங்களை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி எண்ணெய் வளம் உள்பட அனைத்து விதமான இயற்கை வளங்களை ஒரே நிறுவனம் எடுக்க மத்திய அரசு ஒரு அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது.

அதன்படி ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய இரு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை இந்த திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.
 

அது மட்டுமின்றி டெல்டா பகுதியில் விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்த திட்டமிடப்படும். எந்த ஒரு திட்டத்துக்கும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதி கொடுக்காது. கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கலாம். ஆனால் நில பரப்பளவில் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே எதையும் செய்ய முடியும்.
 

ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு தனது ஒப்புதலை இன்று வரை வழங்கவில்லை நாளையும் வழங்காது.
 

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை.

 

 

தமிழக அரசு இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டது போல எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரும் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் எந்த வித உண்மையும் இல்லை.
 

2011-ம் ஆண்டு மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அப்போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.தான் அனுமதி வழங்கியது. அதாவது ஆய்வு செய்வதற்கு அந்த நிறுவனத்துக்கு தி.மு.க. அனுமதி கொடுத்தது.

 

duraimurugan-stalin-cvs


2011-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆன பிறகு டெல்டா பகுதி விவசாய மக்களின் உணர்வுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து ஒரு உயர்மட்ட குழு அமைத்து இந்த திட்டம் பற்றி ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் ஆய்வு நடத்த வழங்கப்பட்ட அனுமதியையும்  ஜெயலலிதா அவர்கள் ரத்து செய்தார்.
 

எனவே  ஜெயலலிதா கொள்கை தான் அரசின் கொள்கை,  ஜெயலலிதா வழியில்  ஜெயலலிதா சொன்னதை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.
 

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் அ.தி.மு.க. அரசு அது தொடர்பான ஆய்வுக்கோ அல்லது உற்பத்திக்கோ நிச்சயம் அனுமதி கொடுக்காது.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக ஒரு போதும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்.
 

டி.ஆர்.பி.ராஜா:- அமைச்சர் பேசும் போது, தி.மு.க. ஆட்சியில் தான் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு உரிமம் வழங்கியது போல பேசுகிறார். அது தவறு. தி.மு.க. ஆட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
 

அமைச்சர் சி.வி.சண்முகம்:- நீங்கள் எத்தனை தடவை கூறினாலும் நடந்த உண்மையை மறைக்க முடியாது. 2010-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது.
 

1-1-2011-ல் தமிழக அரசு தமிழ் நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கலாம் என்று இசைவு தந்தது. எனவே உங்கள் ஆட்சியில்தான் இசைவு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் ஹைட்ரோகார்பன் எடுக்க நீங்கள் ஆய்வுக்கே அனுமதி கொடுத்திருக்க கூடாது என்பதுதான்.
 

அந்த காலக்கட்டத்தில் துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அதிகாரி ராஜீவ் ரஞ்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் கையெழுத்தாகி உள்ளது. ‘‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’’ என்ற நிறுவனத்துக்கு ஆய்வுக்கான அனுமதியை தி.மு.க. அரசு கொடுத்துள்ளது.
 

(சி.வி.சண்முகம், 2011-ல் தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு முழுவதையும் படித்து காட்டினார்).
 

மு.க.ஸ்டாலின்:- அமைச்சர் விளக்கம் தரும் போது தவறான தகவலை தருகிறார். 2011-ல் தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. அந்த திட்டத்தை செயல் படுத்த நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
 

சி.வி.சண்முகம்:- தமிழ் நாட்டுக்குள் ஹைட்ரோகார்பன் திட்டமே வரக் கூடாது என்று நாங்கள் எதிர்த்து வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் ஏன் அந்த திட்டத்துக்காக ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்?


 

துரைமுருகன்:- பொதுவாக எந்த திட்டமாக இருந்தாலும் ஆய்வு என்பது வேறு, அனுமதி என்பது வேறு, ஆய்வையே முடிவு என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
 

சி.வி.சண்முகம்:- கத்திரிக்காயை சாப்பிடுகிறோம் என்றால் அப்படியே சாப்பிட முடியாது வெட்டி, சுத்தம் செய்து சமைத்த பிறகே சாப்பிட முடியும். அது போல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள், அது தொடர்பாக கிணறு தோண்ட ஏன் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் இப்படி ஆய்வுக்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. பிறகு ஏன் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துகிறீர்கள்? மனித சங்கிலி போராட்டம் நடத்தியது எதற்காக? பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதன் நோக்கம்தான் என்ன?
 

மு.க.ஸ்டாலின்:- மத்திய அரசு உங்களது எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்து விடும் என்பதால் போராட்டம் நடத்துகிறோம்.
 

அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடல் பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆய்வு நடத்தினால் கூட அ.தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். தமிழ்நாட்டுக்குள் நில பரப்பளவில் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றே எதையும் செய்ய முடியும். எனவே நீங்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்றார். 

 

சார்ந்த செய்திகள்