நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பணப் பட்டுவாடா செய்த காரணத்தால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதனால் இந்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சியும் தனது பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க தயாராகி விட்டனர். திமுக சார்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மறுபடியும் போட்டியிடுவார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக சார்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுவார் என்று சொல்கின்றனர். வேலூர் தேர்தல் ரத்து என்று செய்தி வந்தவுடன் அதிகமாக கவலைப்பட்டவர் ஏ.சி.சண்முகம் தான் என்கின்றனர். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடியின் அரசியல் செல்வாக்கு உயரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி விசாரித்த போது, அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வேலூர் தொகுதியில் இருக்கும் முதலியார் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக தலைமை கருதுவதாக சொல்லப்படுகிறது. தொகுதியில் தேர்தல் ரத்து என்ற செய்தி வந்தவுடன் அடுத்து தேர்தல் எப்ப வந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மருத்துவ முகாம் மற்றும் தொகுதிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டுள்ளார் என்கின்றனர். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அந்த வெற்றியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார் என்று எடப்பாடி தரப்பு கூறுகின்றனர்.
தற்போதைக்கு அதிமுக கட்சியில் பாஜகவின் தலைமை ஆதரவோடு ஓபிஎஸ் கையே ஓங்கி இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் அவருக்கு இணை அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து ஓபிஎஸ் மகனுக்கு எதிராக களம் இறக்க முடியும் என்று எடப்பாடி கருதுவதாக சொல்கின்றனர். மேலும் மத்தியில் தனக்கு நம்பிக்கைக்கு உரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும் திருப்தி அடைவார். மேலும் நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பாக இருக்கும் ஒரே உறுப்பினர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தான்.ஆகையால் அந்த பெயரை ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவதன் மூலம் மாற்றிவிடலாம் என்று எடப்பாடி கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.