தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று (26.02.2021) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 19- ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.
அந்த வகையில், திமுகவின் பொதுக்குழு மற்றும் திருச்சி மாநாட்டை ஒத்திவைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமைத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், 07.03.2021 அன்று நடைபெறுவதாக இருந்த திமுக பொதுக்குழுக் கூட்டமும், 14.03.2021 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த ‘தி.மு.க. மாநில மாநாடும்’ ஒத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், "கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.