ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இருப்பினும், இலங்கைக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 22 நாடுகளும், எதிர்த்து பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 11 நாடுகளும் வாக்களித்தன.
இந்த நிலையில், போர்க்குற்றத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23/03/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்.
ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன்? தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள். வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத் தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது" இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.