ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், சசிகலாவிடம் யாரும் பேசக்கூடாது. அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, “சசிகலா அதிமுகவில் உறுப்பினரே கிடையாது.
ஆனால் அவர் தற்போது தொலைபேசியில் சிலருடன் பேசி அதிமுகவின் வளர்ச்சி மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கிறார். அதிமுக தலைமைக்கு வெற்றிடமும் பஞ்சமுமில்லை. கட்சியை இரட்டை குழல் துப்பாக்கி போல் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி கௌரவமானதுதான். இன்னும் சொல்லப்போனால், வெற்றிகரமான தோல்வி. கட்சிக்குள் பிரச்சனை ஏற்படுத்தியதால் ஜெயலலிதாவே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் கட்சியில் நடந்தன, அதற்கு காரணம் சசிகலாதான். நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை ஜெயலலிதா நம்பினார்.
ஆனால் ஜெயலிதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் சசிகலா. ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால் ஜெயலலிதா எவ்வாறு இறந்தார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு எதுவும் தெரியாது, சசிகலாவின் உறவினர்கள்தான் கட்சியில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சசிகலா தற்போது தன்னை தாய் என்று கூறிவருகிறார், அவர் தாய் அல்ல பேய்தான். அவரது சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். கட்சியினர் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்” என்று கூறினார். இக்கூட்டத்தில் ஜெ பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.