சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ’வாகவும் இருந்தவர் ஜெ. அன்பழகன். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அன்றைய தினம் அவருடைய 62வது பிறந்த நாளாகும். பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்த சம்பவம், திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெ. அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று (10.06.2021) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, திமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு, “கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ. அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும். மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை இந்த அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.