நாடாளுமன்றத் தேர்தல்-2019இல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது தீர்மானத்தில், மத்திய பாஜக அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ''நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும் சரி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசும் சரி; மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. இரு அரசுகளும் கைகோர்த்துக் கொண்டுள்ளன. சரியாகச் சொல்வதென்றால், மோடி அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஏவல் அரசாகவே உள்ளது பழனிசாமி அரசு.
தமிழகத்தை பாதிக்கும் நீட், ஹைட்ரோகார்பன் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், சேலம்-படப்பை 8 வழிச்சாலை, 8 வடக்கு-மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் ஊடாக உயர் அழுத்த மின் தடம் போன்றவற்றை தலையில் கட்டியது மோடி அரசு. ஆனால் அதனை நிராகரிக்கத் திராணி இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது பழனிசாமி அரசு.
தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கையெழுத்திடாதிருக்கிறார் ஆளுநர். இதையும் தட்டிக்கேட்கத் திராணியற்றிருக்கிறது அதிமுக அரசு.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வை சுடுகாடாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 அப்பாவி பொதுமக்களை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக சுட்டுப் படுகொலை செய்த தமிழக அரசு.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அன்றாடம் தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். அதைக் கேட்கவும் துப்பில்லாமல் இருக்கிறது அதிமுக அரசு. இதனை மாநில சிறப்பு பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது''. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது தீர்மானத்தில், 'சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாமல், பதவியில் ஒட்டிக்கொண்டுள்ளது அதிமுக அரசு. அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமாக இப்படி இதனை ஒட்டவைத்திருக்கிறது மோடி அரசு. இதற்காக 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துதான் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்க வேண்டிய மேலும் 3 தொகுதிகள் உள்நோக்கத்துடன் கைவிடப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தாமல் மூன்று ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது அதிமுக அரசு. இதனால் மக்களுக்குப் பெரும் பாதிப்பு என்பதுடன் ஜனநாயகமே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சமும் ஊழலும் மிதமிஞ்சிப்போய் ஆட்சியாளர்களாலேயே தமிழகம் சூறையாடப்படும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கும் தன் கண்டனத்தைப் பதிவு செய்கிறது மாநில சிறப்பு பொதுக்குழு''. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.