சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது சபாநாயகர் தனபால் தினகரனின் ஆதரவாளர்களாக செயல்பட்ட ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மே 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரபுவும், கலைச்செல்வனும் நாங்கள் அதிமுக உறுப்பினர்களாக இருக்கிறோம் என்றும் தினகரனின் அமமுக கட்சியில் எந்த பதவியும் வகிக்கவில்லை என்றும் அதிமுக தலைமை கொறடா என்ன உத்தரவு கொடுக்கிறாரோ அதன்படியே செயல் படுவோம் என்றும் கூறினார்.
![mla](http://image.nakkheeran.in/cdn/farfuture/9zX9GzNjnQl6G4gRdwQQ4GmMQI1dP6_SEeiH1X9diLQ/1556860827/sites/default/files/inline-images/a%209_0.jpg)
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவரும் சற்று ஒதுங்கி இருப்பதாகவும் தற்போதைய சூழலில் தகுதி நீக்க நடவடிக்கையை தடுக்க சட்டத்துறை அமைச்சரை நாடியிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எடப்பாடிக்கு இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் தினகரனின் ஆதரவாக இருப்பதால் இவர்களை முழுமையாக நம்ப நம்ப முடியாது என்றும் இவர்கள் எப்ப வேண்டுமானாலும் நமக்கு எதிராக செயல்படுவார்கள் என்றும் நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகையால் இவர்களை தகுதி நீக்க செய்துவிட்டு நம்பிக்கையான ஆட்களை அந்த தொகுதியில் நிற்க வைக்கலாம் என்று எடப்பாடி ஆலோசிப்பதாகவும் அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்த செய்தி அந்த மூன்று எம்.எல்.ஏ.களுக்கும் சென்றடைய முதல்வரை சரி செய்ய சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மூலம் தூது விட்டதாகவும், அரசுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.