திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுத் திடலில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய கே.என்.நேரு, "வருகிற மார்ச் மாதம், 14ஆம் தேதி நடைபெறக்கூடிய திமுக மாநாடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. 396 ஏக்கர் நிலப்பரப்பில், தமிழகத்தில் உள்ள 77 திமுக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் அமர்வதற்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 400 ஏக்கர் நிலம் பெறப்பட்டு 77 மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் பாதுகாப்பாக நிறுத்திவைப்பதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
எனவே, மொத்தம் 700 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறக்கூடிய இந்த மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கூடியவர்களுக்கு சுமார் 400 சிற்றுண்டிச் சாலைகள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்ய அதற்கான கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் ஒன்றும் பொய் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்த பயிர்க்கடன் என்பது அதிமுக ஆட்சி, கடந்த பத்து வருடமாகக் கூட்டுறவுச் சங்கங்களில் கோலோச்சி நிற்கும் நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி அதன் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட அந்த பயிர்க் கடன்களை மட்டுமே அவர் தள்ளுபடி செய்து இருக்கிறார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் யார் யார் கடன் பெற்றுள்ளார்கள். யாரின் கடனை அரசு தள்ளுபடி செய்தது என்பது பற்றிய பட்டியலை நாங்கள் வெளியிட உள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து வருகிறோம். எனவே, அவரும் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார். இக்கூட்டத்தில் பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.