சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் தினம் குறித்து வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது, “மகளிர் அனைவரும் ஏதோ ஒரு தினத்தில் கொண்டாடிவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடினேன் என சொல்லாமல் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது மகளிர் கையில் தான் உள்ளது. எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. யாரும் எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என சில பெண்கள் சொல்கிறார்கள். நமக்கு யாரும் கொடுக்க வேண்டியது இல்லை. நம் சுதந்திரத்தை நாமே எடுத்துக்கொள்ள வேண்டியது தான். பெண்கள் தங்கள் தகுதி, துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனது மகிழ்ச்சியை பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக குடும்பத்தை விடுத்து முன்னேற வேண்டும் என்பது இல்லை. குடும்ப கட்டமைப்புடன் சேர்ந்த வளர்ச்சி தான் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. அதனால் அனைவரும் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள். மகளிர் தினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல் தினம் தினம் மகளிர் தினமாக கொண்டாடி வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற ஜெயலலிதா மகளிருக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதை இந்நாளில் நினைவு கூர்கிறேன். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அடித்தளமிட்டவர் ஜெயலலிதா. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கி பெண்களை அதிகாரமிக்கவர்களாக, அரசியல் அறிந்தவர்களாக மாற்றுவதற்கான தொடக்கத்துக்கு அடித்தளமிட்டவரும் அவரே.
உலக மகளிர் தினத்தன்றில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே இந்த உலகம் அன்புடனும், அறத்துடன் திகழும் என்பதை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதே நேரத்தில் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த நாளில் உறுதி ஏற்போம். மேலும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.