![Trichy Constituency AIADMK candidate Sand Karikalan brother is Karupaiya](http://image.nakkheeran.in/cdn/farfuture/aZ4xqrVlWXWULD8XJ8ftG-zESF3_nMlR3Al_Ey_xk6M/1710872582/sites/default/files/inline-images/trichy-admk-can-art.jpg)
நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி உறுதியாகி தொகுதிப் பங்கீடுகள் முடிந்து சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கத் தயாராக உள்ளனர்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சில கட்சிகள், சங்கங்கள் தங்களுக்கு விரும்பிய ஒற்றைத் தொகுதி கொடுங்கள் மாநிலம் முழுவதும் ஆதரவளிக்கிறோம் என்று கேட்டு வருகின்றனர். அதில் திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதியை முத்தரையர் முன்னேற்றச் சங்கம் கேட்டு வருகிறது. சாதகமான பதில் வரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணல் மாஃபியா குளந்திரான்பட்டு கரிகாலன் சகோதரரும், அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளருமான கருப்பையாவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அ.தி.மு.க.வினர் பலரும் கருப்பையாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அ.தி.மு.க. கட்சித் தலைமை வேட்பாளர் அறிவிப்பை வெளியிடும் முன்பே திருச்சி தொகுதி வேட்பாளர் கருப்பையா என்ற தகவல் அவர் மூலமாகவே வெளியில் பரவி, தனக்கு சீட்டு உறுதி ஆகிவிட்டது ஆதரவு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார் என்கிறார்கள் ர.ர.க்களே. இதனால் கட்சிக்குள் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.