‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதே நேரத்தில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க, பொருளாளரும், நாடாளுமன்ற குழு உறுப்பினருமான டி.ஆர். பாலு நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த மத்திய அரசு பலமுறை முயற்சி செய்து வருகிறது. ஆனால், இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. ஆனால் அந்த முறையை கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டில் இன்னும் 2 1/2 ஆண்டு கால திமுக ஆட்சி இருக்கிறது. அதை என்ன செய்யப்போகிறார்கள்?. ஒருவேளை தேர்தல் நடத்தி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அப்போது என்ன செய்வார்கள்? அதனால், இந்த முறையை நிறைவேற்றுவதற்கு பலவிதமான நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் இது குறித்து ஒப்புதல் வாங்க வேண்டும். அதன்பிறகு தான் இந்த முறையை கொண்டு வர முடியும்.
பாரத் என்ற சொல் ஏற்கனவே அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது. இது ஒன்றும் புதிது கிடையாது. அதனால், இதை நாம் எதிர்க்கவும் முடியாது, தவறு என்றும் சொல்லவும் முடியாது. பா.ஜ.க.வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி வைத்துள்ளதால் அந்த பெயரை கண்டு பயப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி என்று தான் அனைவரும் சொல்வார்கள். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதை சொல்லக் கூடாது என்று சொல்லவும் முடியாது. நாங்கள் இந்தியா கூட்டணி என்று வைத்ததால், அவர்கள் வேறு சொல்லை பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ‘பாரத்’ என்று மாற்றினாலும் நாங்கள் ஒன்றிய அரசு என்று தான் கூறுவோம். எங்கள் கூட்டணியை இந்தியா என்று தான் அழைப்போம்” என்று கூறினார்.