
தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்தவர் தடங்கம் சுப்பிரமணியம். இவரை அப்பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகத் தர்ம செல்வன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தர்ம செல்வன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், “நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் அந்த அதிகாரி இருக்க மாட்டார் (ஒருமையில் குறிப்பிடுகிறார்).
இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கும் ஆட்களைச் சொல்லி மாற்ற முடியாது. நான் லெட்டர் வைத்தால்தான் மாற்ற முடியும். அதனை நீங்கள் உணர வேண்டும். கலெக்டர், எஸ்பி என அரசு அதிகாரிகள் வரை அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால் அதிகாரிகள் இருக்கமாட்டார்கள். யாரும் கேம் விளையாட இங்கு இடமில்லை. மீறி கேம் விளையாடினால் கதை முடிந்துவிடும்” என உள்ளது. இந்நிலையில் தர்ம செல்வனின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்ம செல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாகச் செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல் துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது. ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்குத் தீர்வாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.