தூத்துக்குடி பாராளுமன்றத்தின் தி.மு.க. வேட்பாளரான கனிமொழி கடந்த ஒரு வருடமாகவே தொகுதியில் நிவாரண உதவிகள், செய்தலும் அத்தொகுதியைக் குறிவைத்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியவர் தான். தற்போது தி.மு.க.வின் தலைமையால் வேட்பாளராக அறவிக்கப்பட்ட பிறகு மனுத்தாக்கலுக்கு முன்பாகவே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
திருச்செந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க.விலிருந்த போதும், பின்னர் தி.மு.க.விற்கு மாறியபோதும் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு ஜெயித்தவர். அதன் காரணமாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிக் கணக்கோடு துவக்க இன்று காலை 9.30 மணியளவில் திருச்செந்தூரின் கீழ் இரதவீதியில் தொடங்கினார். பின்பு நான்கு இரதவீதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டவர், தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் விவசாயம் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர். அவர் வழியில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம். ஸ்டெர்லைட், எதிர் தரப்பு வேட்பாளருக்காக மறைமுகமாக உதவுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். விவசாயத்திற்கும், குடி தண்ணீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று பேசினார் கனிமொழி.
பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியின் தொண்டர்கள், மற்றும் தி.மு.க.வின் தெற்கு மாவட்ட செயலாளர். அனிதாராதகிருஷ்ணன் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். பிரச்சாரம் செல்லும் இரதவீதிகள், பரமன்குறிச்சி பகுதிகளில் கூட்டம் திரண்டிருந்தது. வெயில் காரணமாக பரமன்குறிச்சி, செல்கிற வழியில் பதனீர் விற்பனை நடந்து கொண்டிருந்தது. அங்கு தன் பிரச்சார வாகனத்தை நிறுத்திய கனிமொழி, உடன்வந்த தொண்டர்களுக்கு சாப்பிடுவதற்கு பதனீர் கொடுக்க ஏற்பாடு செய்தவர் தானும் பனை ஒலையில் பதனீர் அருந்தியதைக் கண்டு தொண்டர்கள் நெகிழ்ந்தனர்.