தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியைக் கைப்பற்றி, கரோனா என்ற மாபெரும் சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ளனா். இருப்பினும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரைச் சுற்றி இருக்ககூடிய திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பெரும் உறுதுணையாக உள்ளனர். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் தற்போது கரோனாவைத் தடுக்க போராடிவருகின்றனா். அவர்களுடைய முயற்சி ஒருபக்கம் பலன் அளித்துவருகிறது.
மற்றொரு பக்கம் கடந்த ஆட்சியில் இருந்து இன்றுவரை பணியில் இருக்கும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளும், ஆட்சியாளா்களைக் கரோனா துரத்துவதுபோல் தினமும், அவர்கள் செல்லும் இடங்களையெல்லாம் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். தற்போது அப்படிபட்ட கூத்து திருச்சியில் நடைபெற்றுவருகிறது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவை, தினமும் அவர் செல்லும் இடங்களில் எப்படியாவது காவல்துறையைச் சோ்ந்த ஒரு உயர் அதிகாரியாவது நேரில் சந்தித்துவிடுகின்றனா். அதற்கு முக்கியக் காரணம், திருச்சியில் பணியாற்றிய பெரும்பாலான காவல்துறை உயரதிகாரிகள் வெளிமாவட்டங்களைச் சொந்த ஊராக கொண்டிருந்தாலும், திருச்சியில் வந்து பணியாற்றி இங்கேயே நிரந்தரமாக இருந்து, தொழில் ரீதியாகவும், பண ரீதியாகம் பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டனர்.
தற்போது தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் இங்கு வந்தால் தங்களுடைய தொழில் பாதிக்காதபடியும், மற்ற போக்குவரத்து காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் நினைத்து, அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அதிலும் ஓய்வுபெற்ற முன்னால் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் அதிகாரி ஒருவர், திருச்சியில் செட்டிலான நிலையில் தற்போது அமைச்சரை சந்தித்து புதிய நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையரை நியமிக்க சிபாரிசு செய்துவருகிறார். அதேபோல் எஸ்.ஐ. ஆக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெறும்வரை திருச்சியில் இருந்த அதிகாரி, அதன்பின் அமைச்சர்கள் எஸ்.கார்டு பிரிவிலிருந்து மீண்டும் தற்போது ஸ்ரீரங்கத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரி வளர்மதியை பிடித்து, வருமானம் தரும் ஸ்ரீரங்கம் பகுதியைக் கேட்டு வாங்கிக்கொண்டு சென்றார். தற்போது முன்னாள் துணை மேயர் மூலம் அமைச்சர் கே.என். நேருவிடம் திருச்சி கோட்டை சரகத்தைப் பிடிக்க முயற்சி செய்துவருவதாக செய்தி கசிய ஆரம்பித்துள்ளது.
தமிழக முதல்வர் எந்த அதிகாரிகளும், ஆட்சியாளா்களை நேரில் சந்திக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள், ஆட்சியாளா்களை சந்தித்த வண்ணமாகவே இருக்கின்றனா். இதற்கு முன்பு ஜெயலலிதா வரும் வழியில் காத்துக்கிடந்த அதிமுகவினர், ஜெயலலிதா திரும்பிப் பார்த்துவிட மாட்டாரா என்ற ஆர்வத்தில் இடத்தை தேர்வு செய்து, தொண்டா்கள் நிற்பார்கள். அதேபோல், தற்போது அமைச்சர் கே.என். நேருவின் வருகைக்காக சாலையில் வரிசையாக காத்திருக்கிறார்கள். நம்மை அமைச்சர் பார்த்துவிட மாட்டாரா என்று. அமைச்சரிடம் திட்டு வாங்கினால் நன்மை கிடைக்கும் என்று ஒரு கும்பலும், அமைச்சர் நம்மை பார்த்துவிட மாட்டாரா என்று மற்றொரு கும்பலும் ஒரு இடம் தவறாமல் பயணிப்பது, எங்கு கொண்டு நிறுத்த போகிறதோ தெரியவில்லை?. ஊரடங்கையும் மதிக்காத அதிகாரிகள், ஊரடங்கிலும் அடங்காத தொண்டா்கள்.