தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டின் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குழுவுடன், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் உம்மன்சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது காங்கிரஸ் தரப்பு 30-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளையும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றை தி.மு.க.விடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. தரப்பு, முதலில் 18 சட்டமன்றத் தொகுதிகளைத் தருவதாகக் கூறியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 23 சட்டமன்றத் தொகுதிகளைத் தருவதாக தி.மு.க. தலைமை கூறியது.
இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (05/03/2021) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் பார்வையாளர்கள், மேலிடப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்... எனக் கூறியவாறு கண்கலங்கினார்.
தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர தி.மு.க. சம்மதம் தெரிவித்ததாகவும், 4 சட்டமன்றத் தொகுதிகளால் இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.