
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவையில் இருந்து பெங்களூரை நோக்கி 25 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு பெருந்துறை அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் வந்த குப்பன் என்ற முதியவர் திடீரென இருசக்கர வாகனத்தை ஆம்னி பேருந்திற்கு குறுக்கே செலுத்தியுள்ளார். இதனால் பேருந்து ஓட்டுநர் விபத்து ஏற்படாமல் இருக்க பேருந்தை ஓரம்கட்ட முயன்ற பொழுது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர். ஆனால் இரு சக்கர வாகனத்தில் வந்த முதியவர் குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். முதியவரின் உடல் பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பேருந்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெருந்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.