தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா- தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கையெழுத்திட்டனர். இது தொடர்பாக அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூட்டணி ஒப்பந்தத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், 06/04/2021 நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா- தமிழ்நாடு (SDPI) கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா- தமிழ்நாடு (SDPI) கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா- தமிழ்நாடு (SDPI) கட்சிக்கு தமிழ்நாட்டில் 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி (மேற்கு), திருவாரூர், மதுரை மத்திய தொகுதி, பாளையங்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் தெகலான் பாகவி கூறியதாவது; "எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மக்கள் நீதி மய்யம்தான் முதலில் பேசியது. மக்கள் நீதி மய்யத்துடன் எஸ்.டி.பி.ஐ. பேசியதாக நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளில் அ.ம.மு.க.வும் ஒன்று என்பதால் கூட்டணி அமைத்துள்ளோம்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "மக்கள் நீதி மய்யத்துடன் பேசிவந்தோம்; அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததற்குப் பல காரணங்கள் உள்ளன" எனத் தெரிவித்தார்.