திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.
அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.
இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.
தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி; அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.