தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையில், திருச்சியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழக திமுக ஆட்சி 8 மாதம் முடிந்திருக்கிறது. 80 ஆண்டு காலம் எப்படி ஒரு மனிதர் ஆட்சி செய்தால் சலிப்பு கோபம் வருமோ அது எட்டு மாதத்தில் வந்திருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் 120 கோடி ரூபாய் கமிஷன் அடித்திருக்கிறார்கள். தமிழகத்தைத் தேடித்தேடி பிரதமர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுத்தார். எந்த வேலையும் நடந்த மாதிரி தெரியவில்லை.
பாஜகவின் நீட் ஆதரவுக்கு எதிராக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு போட்டு உள்ளனர். தமிழகத்திற்கு வேறு எந்த மருத்துவக் கல்லூரியை தனியாருக்கு கொடுக்காமல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு என 11 மருத்துவக் கல்லூரியை தமிழகத்திற்கு பிரதமர் கொடுத்து உள்ளார். திமுக எதைக் கையில் எடுத்தாலும் இரண்டு வாரம் மட்டும் தான் பேசுவார்கள். நீட் தேர்வு மூலம் தான் பல பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாரதம் 75 என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட ஊர்தி நிராகரிக்க காரணம்; திமுகவின் கையாலாகாத தனத்தால் ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டது. கதை திரைக்கதை வசனத்தில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. திமுகவின் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார களத்திற்கு வருவதற்கு பயப்படுகிறார். இதுவரை சரித்திரத்தில் முதலமைச்சர், வெளியில் வந்து ஓட்டு கேட்காத முதல் தேர்தல் இது தான். ராகுல் காந்தி சொன்ன நேரம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று பேசினார்.