ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம் பெதானந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் 64 வயது மூதாட்டி. இவர் அங்குள்ள கோயிலில் தூய்மை பணி மேற்கொண்டு வந்துள்ளார். ஒரு மகளுக்கும் திருமணமாகிவிட்டதால், அந்த மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தினமும் கோயிலில் பணியில் ஈடுபட்டு வரும் மூதாட்டி கடந்த 2ஆம் தேதி பணிக்கு வரவில்லை. இதனால், கோயில் நிர்வாகத்தினர் இது குறித்து மூதாட்டியின் மகளிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து, அவரது மகள் வீட்டிற்குச் சென்று பார்த்து போது, ரத்த காயங்களுடனும், யாரோ கடித்து வைத்த அடையாளங்களுடனும் தாய் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள், பிரதிபாடு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த கைரேகை தடயங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில், மஞ்சு (40) என்ற சைக்கோ குற்றவாளி அப்பகுதியில் சுற்றித்திரிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் மஞ்சுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 2023ஆம் ஆண்டு 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி மஞ்சு சிறைக்குச் சென்றுள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, 2024இல் மீண்டும் 75 வயது மூதாட்டியை மஞ்சு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அந்த மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மஞ்சு, கடந்த 1ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்பு, அன்றிரவு அப்பகுதியில் சைக்கோ போல் சுற்றி திரிந்த மஞ்சு, 64 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அடுத்தடுத்து ஜாமீனில் வெளியே வந்து தொடர்ச்சியாக மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.