அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த 2023 ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கையால் அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை இழந்து இருந்தது. மேலும் இது பெரும் சர்ச்சையாகவும் மாறி இருந்தது. அதானி குழுமம், இந்திய முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையே, அதானியின் முறைகேடுகளுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (செபி) உதவியதாக அதன் தலைவர் மாதவி புச் மீதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனால், மத்திய பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த சூழலில், கடந்த மாதம் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியானது. அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் அறிவிப்பு வெளியிட்டார். அதானி நிறுவனம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீரென மூடப்படுவதாக வெளியாக அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
இந்த நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது என முதன் முதலாக அதன் நிறுவனர் பதிலளித்துள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனரான நாதன் ஆண்டர்சன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேச்சியளித்தார். அப்போது அவர், “எந்தவொரு சட்டரீதியான அல்லது வேறு எந்த அச்சுறுத்தலாலும் எனது நிறுவனத்தை மூடுவதற்கான முடிவு எடுக்கப்படவில்லை, மாறாக பணிச்சுமை காரணமாக எடுக்கப்பட்டது. அதானி குழுமத்திற்கு எதிரான அறிக்கை உட்பட, அதன் அனைத்து அறிக்கைகளிலும் நான் உறுதியாக உள்ளேன். முதலில் ஊடகக் கட்டுரைகள் சிவப்புக் கொடிகளை கோடிட்டுக் காட்டுவதைக் கண்டோம், கூர்ந்து கவனித்தோம், மேலும் ஆதாரங்களைப் பின்பற்றி வந்தோம். நாங்கள் எப்போதும் இந்தியாவின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நான் ஏன் ஓய்வு பெற்றேன் என்பது அனைத்தும் கடிதத்தில் உள்ளது. இது எந்த அச்சுறுத்தல், உடல்நலப் பிரச்சினை, தனிப்பட்ட பிரச்சினை அல்லது வேறு எதையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஹிண்டன்பர்க் என்பது ஒரு மென்பொருள் செயலியாகவோ அல்லது சைக்கிள் தொழிற்சாலையாகவோ இருந்தால், நீங்கள் அதை விற்கலாம். ஆனால் அது என்னால் இயக்கப்படும் ஆராய்ச்சியாக இருக்கும்போது, நீங்கள் அதை அப்படியே விட்டுவிட முடியாது” என்று கூறினார்.