தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பிரதானக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கிய நிலையில், பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (04/03/2021) அ.தி.மு.க., த.மா.கா.வுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியது. அ.தி.மு.க. சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர்கள் கோவை தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, த.மா.கா. தரப்பில், 'சைக்கிள்' சின்னத்தில் போட்டியிட 12 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டதாகத் தகவல் கூறுகின்றன.
இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் விரும்பிய தொகுதிகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், வால்பாறை, ஈரோடு மேற்கு, காங்கேயம், பட்டுக்கோட்டை, ஓமலூர், பண்ருட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.