கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் வழிப்பாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. பின்பு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் அனைத்துக் கோயில்களும் திறக்க அனுமதித்தது அரசு. அந்த வரிசையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த புரட்டாசி மாதமும் கிரிவலம் வருவதற்குத் தடை விதித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி. ஏற்கனவே கடந்த 6 மாதமாக கிரிவலம் வர தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளித்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள். அப்படி வருபவர்களில் யாருக்குக் கரோனா இருக்கிறது எனக் கண்டறிய முடியாது. அவர்களால் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதி பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவதற்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்கிறார்கள் அதிகாரிகள்.