2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிவித்தார். அதன்பிறகு தேர்தல் முடிந்ததும் அரசியல் குறித்து பேசவும், அதிமுக தொண்டர்களிடமும் பேசி வந்தார். சமீபமாக அவர் அவ்வப்பொழுது அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றும் குறிப்பிட்டு வருகிறார்.
அதுபோல், இன்றும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதை நம் இயக்கத்தின் இருபெரும் தலைவர்களும் நிரூபித்துச் சென்றுள்ளார்கள்.
இந்த இயக்கத்தின் வேர்களாகவும், விழுதுகளாகவும் விளங்கும் அடிப்படைத் தொண்டர்களின் வாழ்வு மலரவும், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயரவும், எஞ்சியுள்ள என் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். கழகத் தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம். நம் புரட்சித் தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கி விட்டது.
ஒரு ஐந்து பேர் கூடி முடிவெடுத்து தன்னை தி.மு.க.வில் இருந்து நீக்கியதை மனதில் வைத்துத்தான், அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவரால்தான், தனது கட்சியை சிறப்பாக வழி நடத்த முடியும் என்று கருதிய நம் புரட்சித் தலைவர், இதற்காகத்தான் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தனித்துவமான ஒரு சட்ட விதியை நாட்டிலே வேறு எந்த கட்சியிலும் இல்லாத ஒரு விதியை தனது கட்சிக்காக உருவாக்கினார்.
குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதையும், அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும், இயக்கத்தின் ஆணிவேராக இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்கள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். நம் புரட்சித்தலைவரும், நம் புரட்சித்தலைவியும் என்றைக்கும் நம்மோடு இருக்கிறார்கள். கலங்க வேண்டாம். கழகம் என்றைக்கும் தோற்று போக விடமாட்டேன். இது உறுதி.
நம் புரட்சித் தலைவரின் எண்ணத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும், நம் அடிப்படைத் தொண்டர்கள் பலன் அடையும் வகையிலும், நம் புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல், இதற்கு வலு சேர்க்கும் வேலைகளை முதலில் செய்வதுதான் இன்றைக்கு நமது முதல் கடமையாக கொண்டு, ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்.
இந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை கண் அயராது, ஓய்வின்றி உழைப்போம், உழைப்போம் என்று அனைத்து அடிமட்ட தொண்டர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.