திருவாரூர் அருகே ஆட்டோவில் வாக்களிக்க வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பெண்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் வந்த ஆட்டோவை உடைத்து கீழே தள்ளியதில் ஆட்டோவில் இருந்த கர்ப்பிணி பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி காலை 7மணி முதல் வாக்காளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் வாக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் கேக்கரை சாலையில் தனியார் பள்ளியில் நாகை நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது.
அதே பகுதியை சேர்ந்த குணசேகர் என்பவர் தனது ஆட்டோவில் உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணை வாக்களிப்பதற்காக அழைத்து வந்துள்ளார். இந்த ஆட்டோவில் அமமுக சேர்ந்த நகர செயலாளர் கடலை கடை பாண்டியின் பெயர் எழுதப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அதிமுகவினர், ஆட்டோவை அதிமுக நகர அம்மா பேரவை செயலாளர் கலியபெருமாள் தலைமையில் இடைமறித்து எப்படி வாக்களிப்பதற்கு வாக்காளர்களை ஆட்டோவில் அழைத்து வரலாம் என ஓட்டுநர் குணசேகரனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதையடுத்து அதிமுகவினர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ஆட்டோவில் இருந்த உதயசேகரி என்ற கர்ப்பினி பெண்ணை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உதயசேகரி திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அதிமுக நகர அம்மா பேரவை செயலாளர் கலியபெருமாளுக்கும் கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அந்த பகுதியில் குவிந்ததால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.