
அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை போரூரில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களுக்கு இடையேயான தலைமை குறித்த போட்டியில் ஒட்டுமொத்த அதிமுக கட்சியையே பாஜகவின் சதி முயற்சிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்கிற சூழல்தான் இன்று இருக்கிறது.
உண்மையாக எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பின்பற்றிய அதிமுக தொண்டர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு நலன்களோடு தொடர்புடையது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதிமுக, பாமக என இரு கட்சிகளை பயன்படுத்தி பாஜக இங்கே வேரூன்றி விடவேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
தங்களுடைய சுயநலத்திற்காக தலைவர்கள் அந்த இயக்கத்தையே அடமானம் வைக்கக் கூடிய இடத்தில் இருக்கிறார்கள். இந்த மண்ணில் பாஜகவை வளர்ப்பதற்கு அவர்கள் துணை போகிறார்கள். அது அனைத்து வகையிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது” எனக் கூறினார்.