பிரதமர் ராமேஸ்வரத்திலும் அமித்ஷா கோவையிலும் போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும். பிரதமர் மோடி போன முறை காசியில் போட்டியிட்டார். இந்தியாவில் இரண்டு நகரங்கள் தான் முக்கியம். ஒன்று காசி மற்றொன்று ராமேஸ்வரம். இந்த முறை பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோயம்புத்தூரில் போட்டியிட வேண்டும். கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளார்கள். விடுதலைச் சிறுத்தைகள் நேரடியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராகச் செயல்படுகிறார்கள். அதனால் அமித்ஷாவும் மோடியும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட்டால் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்லலாம்.
முன்னால் இருந்த நிலைமை வேறு. இப்பொழுது இருக்கும் நிலைமை வேறு. மோடியைப் பிரதமராக ஏற்றுக்கொள்கின்ற கட்சிதான் தமிழகத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக, பிஜேபி கூட்டணி மிக வலிமையாக உள்ளது. அந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில பேர் எதையாவது சொல்லுவார்கள். கூட்டணி மிக வலுவாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். திராவிட இயக்க ஆட்சியிலேயே எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி. மின்சார பிரச்சனை கடந்த ஆட்சிக்காலத்தில் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லை. திராவிட இயக்க முதலமைச்சர்களில் கலைஞர், ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் என அனைவரையும் விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகிறது. இந்த ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள். 40 இடங்களிலும் அதிமுக, பிஜேபி கூட்டணி வெல்லும்” எனக் கூறினார்.