விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். தமிழக அரசியலில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவனை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ’மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை’ என்கிற தலைப்பில் 1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த மதம் மாற்றம் குறித்து திருமாவளவன் ஆராய்ச்சி செய்தார். தான் மேற்கொண்ட முனைவர் (doctorate) பட்ட ஆய்வு அறிக்கையை பல்கலைகழகத்தில் சமர்பித்திருந்தார்.
நேற்று (24.8.2018) பல்கலைகழகத்தில் வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் பங்கேற்று தனது ஆய்வை விளக்கி உரையாற்றினார். டெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் குற்றவியல் துறையின் பேராசிரியரும், வாய்மொழித் தேர்வின் கண்காணிப்பாளருமான பாஜ்பாய், திருமாவளவனின் ஆய்வு நெறியாளரும், பேராசிரியருமான டாக்டர் சொக்கலிங்கம் மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களும், மாணவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு திருமாவளவன் பதிலளித்தார். இதன் பின்னர் முனைவர் பட்ட ஆய்வில் தேர்ச்சி பெற்றதாக தேர்வாளர்கள் அறிவித்தனர்.
பின்னர் பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கரும், ஆய்வு நெறியாளரும் முன்னாள் துணைவேந்தர் Dr.சொக்கலிங்கம் முனைவர் பட்ட சான்றிதழை திருமாவளவனுக்கு வழங்கினார்கள்.